எனினும் நான் எழுகின்றேன்

எழுத்தாளர் க.நவத்தின் ‘எனினும் நான் எழுகின்றேன்’ மொழிபெயர்ப்புக் கவிதைத்தொகுப்பைப் பற்றிய எண்ணப்பதிவுகள்!

 – வ.ந.கிரிதரன் –

17 ஜூலை 2023

அண்மையில் நான் வாசித்த நூல்களில் என் கவனத்தை ஈர்த்த நூல்களிலொன்று ஒரு கவிதை நூல்.  எழுத்தாளர் க.நவம் மொழிபெயர்த்து ‘நான்காவது பரிமாணம்’ வெளியீடாகக்  கைக்கடக்கமான அளவில் வெளியாகியுள்ள கவிதைத்தொகுதியான ‘எனினும் நான் எழுகின்றேன்’.  நோபல் பரிசு பெற்ற கவிஞர்களான பப்லோ நெருடா (சில் நாட்டுக் கவிஞன்), ‘மாயா ஆஞ்ஜெலோ, அமெரிக்கக் கவிஞரான லாங்ஸ்ரன் ஹியூஸ், பாலஸ்தீனியக் கவிஞரான சாலா ஓமார் உட்படப் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த கவிஞர்கள் எழுதிய கவிதைகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைத்தொகுப்பு.  மிகவும் சிறப்பான தேர்வு தொகுப்பின் முக்கியத்துவத்தை அதிகரிக்கின்றது.

மேலே செல்வதற்கு முன் சில வார்த்தைகள்: நூலிலுள்ள கவிஞர்கள் பற்றிய ஓரிரு வரிக் குறிப்புகள் நிச்சயம் இடம் பெற்றிருக்க வேண்டும். கவிதைகளுடன் கவிஞர்கள் பற்றிய அறிமுகத்துடன் , அவர்களைப் பற்றிய மேலதிகத்தேடல்களுக்கும் அது நிச்சயம் வழி வகுத்திருக்குமென்பதென் திடமான நம்பிக்கை. இதன் அடுத்த  பதிப்பில் நிச்சயம் நவம் இதனை நிறைவேற்றுவாரென்று  எதிர்பார்ப்போம்.  நூலின் அடுத்த முக்கியமான அம்சம்: மொழிபெயர்க்கப்பட்ட ஆங்கிலக் கவிதைகளையும் தொகுப்பு உள்ளடக்கியிருப்பது. அண்மைக்காலமாக இவ்விதமாக மொழிபெயர்ப்புக் கவிதைகளின் தொகுப்புகள் வெளிவரத் தொடங்கியிருப்பதை அவதானிக்கிறேன். ஆரோக்கியமான விடயமிது. ஏனைய மொழிபெயர்ப்புக் கவிதைகளை வெளியிடும் பதிப்பகங்களும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இத்தொகுப்பு நாம் வாழும் உலகின் நானா பக்கங்களிலும் பற்றியெரியும் பல்வகைப்பட்ட மனித உரிமைகளைப் பற்றிக்  குரல் கொடுக்கிறது. இனம், மதம், மொழி, வர்க்கம், பால், நிறம் எனப் பல்வகைப்பிரிவுகளால் எரிந்துகொண்டிருக்கும் உலகை நோக்கிய கவிஞர்களின் தர்மாவேச உணர்வுகளை வெளிப்படுத்தும் கவிதைகள் பலவற்றை இத்தொகுப்பு உள்ளடக்கியுள்ளது.  நாடுகளின் பூர்வீகக் குடிகளின் உணர்வுகளைப் பிரதிபலிக்கும் கவிதையையும் காண முடிந்தது. பல கவிதைகளைப் போர்ச்சூழலில் பல்வேறு அடக்குமுறைகளுக்குள் வாழ்ந்த , வாழும் தமிழர்களாகிய எம்மால் புரிந்து கொள்ள முடிவதுடன் , அவற்றில் வெளிப்படும் உணர்வுகளுடன் ஒன்றிணையவும் முடிகின்றது. தொகுப்புக் கவிதைகளில் சில சூழற் பாதிப்பையும், மானுட நேயத்தை வெளிப்படுத்துகின்றன.

எகிப்தில் பிறந்த பாலஸ்தீனியக் கவிஞன் சாலா ஓமார்.  எட்டு வயதிலிருந்து கவிதை எழுதத்தொடங்கிய கவிஞன்.  புகழ்பெற்ற பாலஸ்தீனியக் கவிஞரான மஹ்மூட் தர்வீஷின் பாதிப்பால் கவிதை எழுதத்தொடங்கிய கவிஞன்.  கவிதை தன் உணர்வுகளுடன் தன்னை ஈடுபட வைப்பதுடன் வாசகர்களுடன் உரையாட வழி சமைப்பதாகவும் கூறும் இக்கவிஞனின் தொகுப்பிலுள்ள்ள கவிதைகளில்  ஒன்று ‘என் அடக்குமுறையாளனுக்கு ஒரு திறந்த மடல்’ ( An Open Letter to My Oppressor). கவிதையை வாசித்தபோது கவிஞர் சேரனின் ‘இராணுவ முகாமிலிருந்து சில கடிதங்கள்’ நினைவுக்கு வந்தது. அதில் சிங்களச் சிப்பாய் ஒருவன் சக சிப்பாய்க்கு எழுதும் கவிதையில் தாம் செய்வதை விபரித்திருப்பான். இதில் அடக்குமுறைக்கு உள்ளாக்கப்படும் ஒருவன் அடக்குமுறையாளனான இராணுவ அதிகாரிக்கு  எழுதும் கடிதமாகக் கவிதை உருவெடுத்துள்ளது.  அதில் அவன் தன் மக்கள் மேல் புரிந்த வன்முறைகளைப் பட்டியலிட்டிருப்பான்.

கறுப்பினத் தந்தைக்கும், வெள்ளையினத் தாய்க்கும் பிறந்தவர் லாங்ஸ்ரன் ஹுயூஸ்.  அமெரிக்கக் கவிஞரான இவர் சமூக, அரசியல் செயற்பாட்டாளர். நாடக, நாவலாசிரியர். பத்தி எழுத்தாளர். ‘ஜாஸ் கவிதை’ என்னும் இலக்கிய வடிவத்தின் முன்னோடிகளில் ஒருவர். கறுப்பின மக்களின் உரிமைக்காகக் குரல் கொடுக்கும் இவரது எழுத்துகள் இன்னுமொரு விடயத்துக்காகவும் முக்கியத்துவம் மிக்கவை. இரு வேறு இனத்தைச் சேர்ந்த பெற்றோருக்குப் பிறந்த கலப்பின மனிதர்களுக்காகவும் குரல் கொடுப்பவை.  அவர்கள் தம் உணர்வுகளை வெளிப்படுத்துகின்றன.

இத்தொகுப்பிலுள்ள கலப்புயிரி (Cross) என்னும் கவிதை அத்தகைய கவிதைகளில் ஒன்று. இன்று சில நிமிடங்கள்  எழுத்தாளர் நவத்துடன் உரையாடியபோது அவரது கலப்புயிரி என்னும் சொற்பதத்தைச் சிலாகித்துக் கூறினேன். அப்பொழுது  அவர் கூறிய ஒரு விடயம் முக்கியத்துவம் மிக்கது.

சிலர்  மேற்படி கவிதையை மொழிபெயர்த்தபோது Cross என்பதை அதன் நேருக்கு நேர் மொழிபெயர்ப்பான சிலுவை என்று மொழிபெயர்த்திருந்தார்களாம்.  படைப்புகளை மொழிபெயர்க்கும்போது மொழிபெயர்க்கப்படும் படைப்புகளை முழுமையாக உள்வாங்கி மொழிபெயர்ப்பது அவசியமென்பதை இது எடுத்துக்காட்டுகின்றது.  மேற்படி கவிதை ‘My old man’s is white old man, And my old mother’s black’ என்று ஆரம்பித்து, ‘My old man died in a fine big house, My ma died in a shack, I wonder where I’m gonna die, Being neither white or black?’ என்று முடியும் கவிதை.  இவ்விதமாகக் கவிதையின் கூறுபொருள் தெளிவாக இருக்கையில் , Cross என்பதைச் சிலுவை என்று  மொழிபெயர்த்தவர்களின் செயல் வியப்பை அளிக்கிறது.

இக்கவிதையின் நவத்தின் மொழிபெயர்ப்பு பின்வருமாறுள்ளது:

கலப்புயிரி  –  லாங்ஸ்ரன் ஹியூஸ்

என் முதிய தந்தை ஒரு வெள்ளைக்  கிழவன்.
என் முதிய அன்னை ஒரு கறுப்பி.
என் வெள்ளைக் கிழவனை நான்
எப்போதாவது சபித்திருந்தால்,
இப்போது என் சாபங்களை
மீளப் பெறுகிறேன்.

என் முதிய கறுப்புத் தாயை
நரகத்துக்குப் போவாயென்று
எப்போதாவது நான் திட்டியிருந்தால்
அக்கெட்ட திட்டுதலுக்காய் வருந்துகிறேன்.
இப்போது  அவளை வாயார வாழ்த்துகிறேன்.

என் முதிய தந்தை
ஒரு அழகிய பெரிய வீட்டில்  இறந்தான்.
என் அன்னை
ஒரு குடிசையில் இறந்தாள்.

நான்
எங்கு உயிர் துறக்கப் போகிறேன்?
எனக்குள் எண்ணி ஏங்குகிறேன்.
வெள்ளையனுமல்லாமல்
கறுப்பனுமல்லாமல்
இருப்பதனால்.

ஜோய்ஸ் கில்மரின் (Joyce Kilmar) ‘மரங்கள்’ (Trees) தொகுப்பிலுள்ள இன்னுமொரு என் கவனத்தை ஈர்த்த கவிதை. கவிதை மரங்களின் பெருமையை வலியுறுத்துகின்றது. அவ்விதம் வலியுறுத்துவதனூடாகச் சூழல் அழிப்பை நினைவூட்டி விமர்சிக்கின்றதாக நான் கருதுகின்றேன். மரத்தைப் படைத்தவர் படைத்ததொரு அழகான கவிதையாகக் கவிஞர் காண்கின்றார். அதே சமயம் மானுடர் படைக்கும் கவிதைகளை அறிவிலிகள் ஆக்கும்  படைப்புகளாகவும்   கருதுகின்றார். இதனை வெளிப்படுத்துகின்றன கவிதையின் முடிவில் வரும் பின்வரும் வரிகள்:

கவிதைகள்
என் போன்ற அறிவிலிகளால் ஆக்கப்படும்
ஆனால் ஆண்டவனால் மட்டுமே
ஒரு மரத்தை ஆக்க முடியும்.

அமெரிக்கக் கவிஞையான மாயா அஞ்ஜலோவின் கவிதைகளான ‘எனினும் நான் எழுகின்றேன் 1’,  ‘எனினும் நான் எழுகின்றேன் 11 &  ‘எனினும் நான் எழுகின்றேன் 111’ தொப்பின் முக்கியமாக கவிதைகள்.  இனம், பால், நிற வேறுபாடுகள் ஏற்படுத்தும் அவமானம், வலி போன்ற உணர்வுகளை உள் வாங்கி, அவவித உணர்வுகளால் சிதைந்து , அடங்கிப் போகாமல் நிமிர்ந்தெழும் உரிமைக் குரல்கள் அவை.

‘உன் சொல்லால் என்னை நீ சுடலாம்.
உன் கண்ணால் என்னை நீ  காயப்படுத்தலாம்.
உன் கொடூர வெறுப்பால் என்னை நீ கொல்லலாம்.
ஆயினும், நான் மேலெழுவேன் காற்றைஒப் போல.’ ( எனினும் நான் எழுகின்றேன் – 11)


‘அச்சமும் பயங்கரமுமான
இரவுகளையும் விட்டு வெளியேறி
நான் எழுகின்றேன்.
அற்புதமான தெளிவுடன் புலரும் அதிகாலையில்
நான் எழுகின்றேன்.
என் மூதாதையர் கையளித்த
கொடைகளைக் கொண்டுவரும்
நானே
அடிமைகளின்
கனவும் நம்பிக்கையுமாவேன்.
நான் எழுகின்றேன்.
நான் எழுகின்றேன்.
நான் எழுகின்றேன்.  ( எனினும் நான் எழுகின்றேன் – 111)


என்னை நீ வரலாற்றில் எழுதிவிடலாம்
கசப்பான, திரிக்கப்பட்ட உனது பொய்களுடன்,
என்னை நீ மிதமிஞ்சிய அழுக்கிலிட்டு நீ  மிதிக்கலாம்
ஆயினும், நான் மேலெழுவேன், தூசி போல.’  ( எனினும் நான் எழுகின்றேன் – 1)

தொகுப்பிலுள்ள சக உயிர்கள் மீதான மானுட நேயத்தை வெளிப்படுத்தும் கவிதைக்கு உதாரணமாக லெம் வோர்ட் கிறிஸ்பீல்ட்டின் ( Lem Ward Crisfield) கழிவிரக்கம் (Remores) என்னும் கவிதையைக் குறிப்பிடலாம்.  வேட்டைக்காரன் ஒருவன் வாத்துச்சோடியொன்றைச் சுட்டு விடுகின்றான்.  அவை காயம்பட்டு நிலத்தில் விழுந்து விடுகின்றன. காயம்பட்ட ஆண் வாத்து  தன் பெண் துணையை வேதனைத் துயரத்துடன் அழைக்கின்றது. அதன் அனுங்கலைக்கேட்ட காயம் பட்ட பெண் வாத்து ஆண் வாத்தை நெருங்கி, அணைத்து, வருடிக்கொடுக்கின்றது. அவ்விதமே உயிரிழக்கின்றன. வேட்டைப்பிரியனான அவனை அக்காட்சி பாதிக்கின்றது. அவ்வாத்துச் சோடியைப் புதைத்து விட்டுச் செல்கையில் தன் துப்பாக்கி, இடுப்புப்பட்டி ஆகியவற்றை விரிகுடாவில் வீசிவிட்டுச் செல்கின்றான்.  கவிதையின் இறுதி வரிகள் பின்வருமாறு முடிகின்றன:

ஓர் அப்பட்டமான மட்டரக விளையாட்டு வீரனென
மற்றைய வேட்டையர்கள் என்னை அழைப்பர்.
நான் செய்த செயலையிட்டுக் கேலி செய்வர்.
ஆனால்
அன்று ஏதோ ஒன்று
என் இதயத்தை உடைத்து நொறுக்கியது.

மீண்டும் சுடுவதா..?
கடவுள் தடுப்பாராக.

தொகுப்பின் இன்னுமொரு முக்கியக் கவிதை பாலஸ்தீனத்துக் கவிஞையான  ஃப்ட்வா ருகானின் (Fadwa Tuqan ) என்றும் உயிர்ப்புடன் (Ever Alive) கவிதை. ஆயுதப் போராட்டம் மெளனிக்கப்பட்ட நிலையில், இன்னும் அவர்களது உரிமைப்போராட்டம் முற்றுப்பெறாத நிலையில் வாழும் இலங்கைத் தமிழர்கள் பலர் இவரது கவிதை வரிகளில் தம் உணர்வுகள் கிடப்பதை உணர்வார்கள்.

என் அன்புக்குரிய தாய்நாடே
கொடுங்கோன்மையின் பாழிடத்தில்
வலியின், துன்பத்தின் தடங்கள்
எவ்வளவு காலம்தான்
உன்னைக் கடைந்திடினும்
உனது கண்களைப் பிடுங்கவோ
அல்லது உனது நம்பிக்கைகளையும்
கனவுகளையும் சாகடிக்கவோ
அல்லது மேலெழும்
உனது மனவுறுதியைச் சிலுவையிலறையவோ
அல்லது உனது பிள்ளைகளின்
புன்னைகையைக் கள்வாடவோ
அல்லது அழிக்கவோ எரிக்கவோ
அவர்களால் ஒருபோதும் முடியாது.
ஏனெனில்
எங்கள் ஆழ்ந்த சோகங்களிலிருந்து
நாங்கள் சிந்திய குருதியின் புத்துணர்விலிருந்து
வாழ்வினதும் மரணத்தினதும் அதிர்விலிருந்து
உன்னிடத்தே வாழ்வு மீண்டும் மறுபடி பிறக்கும்.

ஸலா ஒமாரின் ஜெருசலத்தில் தொலைந்தேன் (Lost in Jerusalem) கவிதையில் நவம் நட்சத்திரப் பெருவெடிப்பான சுப்பர் நோவா (Supernova) என்பதற்கு நல்லதொரு கலைச்சொல்லை உருவாக்கியுள்ளார்.  அது ‘மீயொளி விண்மீன்’.  நல்லதொரு புதுச்சொல்லாக இதனைக் காண்கின்றேன். கவிதை தன் காதலியுடன் கடிதங்கள் படையினரால் தடுக்கப்பட்ட நிலையில், தொடர்புகொள்ள முடியாத நிலையில் வாடும் இளைஞன் ஒருவனின் அவள் மீதான் காதல் உணர்வுகளை வெளிப்படுத்துகின்றது. யுத்தபூமியில் மரணத்துள் வாழும் மக்களின் பிரதிகளில் ஒருவன் அவன்.

இவை இத்தொகுப்பு பற்றிய முழுமையான பார்வை அல்ல. வாசித்த கவிதைகளை மையமாக வைத்து எழுந்த உணர்வுப் பதிவுகள். நல்லதொரு மொழிபெயர்ப்புக் கவிதைத்தொகுப்பைத் தந்ததற்காக எழுத்தாளார் க.நவம் நிச்சயம் பெருமைப்படலாம். எதிர்காலத்தில் மேலும் பல இத்தகைய தொகுப்புகளை எதிர்பார்க்கின்றோம்.

girinav@gmail.com

(நன்றி: பதிவுகள்..கொம்)

This entry was posted in விமர்சனம். Bookmark the permalink.

Leave a comment